கதறும் மக்கள்... முதல் ஆளாக விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காண கள்ளக்குறிச்சி விரைகிறார் விஜய்!
தளபதி விஜய் விஷ சாராயம் அருந்தி அதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளவர்களையும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டையே அதிர வைத்த நிலையில், அதையே மிஞ்சி விட்டது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கள்ளச்சாரயம் அருந்திய 70-க்கும் மேற்பட்டோர் அரசு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதில் சில அதிகாரிகளின் மெத்தனம் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதே போல் இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆட்சியில் இருக்கும் திமுகவை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை, தளபதி விஜய் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் குறித்து போட்டிருந்த பதிவில் "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது பலி எண்ணிக்கை கூடி கொண்டே செல்வதால்... இந்த கடுமையான நேரத்தில் மக்களுடன் இருப்பது தான் முக்கிய என நினைத்து, முதல் ஆளாக கள்ளக்குறிச்சிக்கு தளபதி விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பம் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக கூறப்படுகிறது.