தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கல்வி விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

TVK Vijay : நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்காக ஊக்கத்தொகை அளித்து கெளரவித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கல்வி விருது விழாவை வெற்றிகரமாக நடத்திய விஜய், இந்த ஆண்டும் அவ்விழாவை மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிட்டிருந்தார். அதன் முதல் இரண்டு கட்ட விழா நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள ஷெர்டன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

மெளன அஞ்சலி செலுத்திய விஜய்

இந்த விழாவில் 51 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தன் கையால் விருதுகளை வழங்கி வருகிறார். இவ்விருது விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக மேடைக்கு வந்த விஜய், விருதுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் முன்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் பலியானவர்களுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார். அங்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரும் மெளன அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பேசிய விஜய், மிகப்பெரிய ஒரு விபத்து குஜராத்தில் நடந்திருக்கு. அதன் வீடியோக்கள், புகைப்படங்களை பார்க்கும் போது மனசே பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை. இறந்தவர்களுக்காக 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துமாறு விஜய் கேட்டுக் கொண்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு தன் கையால் கல்வி விருதுகளை வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் விஜய்.

அகமதாபாத் விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என 242 பேருடன் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.40 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானம் டேக் ஆஃப் ஆன சில விநாடிகளில் அருகில் இருந்து மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.