குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 242 பேர் உயிரிழந்தனர். 

Ahmedabad Plane Crash: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் AI171 நேற்று மதியம் 1:38 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 230 பயணிகள், 10 பயணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

ஏர் இந்தியா விமானம் விபத்து

அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 625 அடி உயரத்தை எட்டிய போது விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'மே டே அழைப்பு' எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அவசர அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றும், சிக்னல் கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதியது.

கருப்பு பெட்டி

விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் கருப்புப் பெட்டி 9 மணி நேரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் குஜராத் முதல்வர் பூபேந்தர படேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமதாபாத் புறப்பட்டுச் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி

இந்நிலையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி, விபத்து குறித்து விசாரணை நடத்தும் பல்வேறு மட்ட அதிகாரிகள் உட்பட பலர் பிரதமருடன் இருந்தனர். விபத்து நடந்த இடத்தையும், மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் பிரதமர் பார்வையிட்டார்.