தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய், நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vijay Mourns For The Demise of Robo Shankar : நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர். அங்கு ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் மகள் மற்றும் மனைவிக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் செந்தில், சின்னத்திரை பிரபலம் கேபிஒய் பாலா, அமுதவாணன், விஜே அர்ச்சனா ஆகியோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் விஜய் இரங்கல்

நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் சமூக வலைதளம் வாயிலாக தங்கள் இரங்கல் பதிவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான தளபதி விஜய், ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து விஜய் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.

நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.