Robo Shankar Passes Away : நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.
Robo Shankar Death : நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்து, உடலில் உள்ள உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து நேற்று இரவு உயிர் பிரிந்தது. அவரின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடல் அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை 4 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே நேற்று இரவே ரோபோ சங்கர் உடலுக்கு நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சிவகார்த்திகேயன் அஞ்சலி
இந்த நிலையில், ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தற்போது அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். ரோபோ சங்கர் உடலுக்கு மாலை அணிவித்து கலங்கி நின்ற சிவகார்த்திகேயன், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவுக்கு ஆறுதல் கூறினார். சிவகார்த்திகேயனை பார்த்ததும் கண்ணீர்விட்டு கதறி அழுதார் பிரியங்கா.
ரோபோ சங்கரும் சிவகார்த்திகேயனும் வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் மூலம் தான் ரோபோ சங்கர் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
