ரோபோ சங்கர் மறைவின் பகீர் பின்னணி..! வெளியான பரபரப்பு தகவல்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை
நடிகர் ரோபோ சங்கர் தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர், மேடை சிரிப்புரைஞர் மற்றும் தொகுப்பாளர் என பல துறைகளையும் சிறப்பித்தவர். மதுரையைச் சேர்ந்த இவர், தனது தனித்துவமான ரோபோட் நடனம் மற்றும் உடல் மொழி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 46 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது திரை வாழ்க்கை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களால் அழகுபடுத்தப்பட்டது.
ஸ்டேண்ட் அப் காமெடியன்
ரோபோ சங்கரின் திரை பயணம் சின்னத்திரையில் இருந்து தொடங்கியது. விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் ஸ்டேண்ட்-அப் காமெடி மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி அவரது தனித்துவமான உடல் மொழி மற்றும் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியது. பின்னர், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ், செம்பருத்தி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் செயல்பட்டார். இவை அவரை தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் ஸ்திரமாக்கின.
200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
1997 முதல் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். ரஜினியின் படையப்பா (1999) படத்தில் சிறு பங்கு வகித்தது அவரது முதல் தோற்றம். ஆனால், உண்மையான அறிமுகம் 2013-ல் விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தால் கிடைத்தது. இதன் பிறகு, அவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
கலைஞனின் உயிரைக் குடித்த மது
200-க்கும் மேற்பட்ட படங்கள், ஏராளமான டிவி நிகழ்ச்சிகள் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். திரைத்துறையில் குறிப்பிட்ட உச்சத்தைத் தொட்ட நிலையில் இலங்கை, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையான அவர் 60 ரூபாய் தொடங்கி 60 ஆயிரம் ரூபாய் வரை அனைத்து வகையான மதுவையும் ருசித்துவிட்டதாக அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர் மரணத்திற்கான காரணம்
தொடர்ந்து மது பழக்கத்திற்கு ஆளான ரோபோ சங்கருக்கு உடலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் மது பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திய அவருக்கு அண்மையில் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது காலம் எந்தவித படப்பிடிப்பு பணிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். பின்னர் அண்மையில் தான் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் காட்ஜில்லா படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் உடலில் ஏற்பட்ட நீர்சத்து குறைபாட்டால் மயங்கி விழுந்தார். உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கருக்கு வென்டிலேட்டர் உதவியோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கல்லீரல் முழுமையாக செயல் இழந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ரோபோ சங்கரின் மரணத்திற்கு, அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதும், அதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதுமே காரணம் என்று சொல்லப்படுகிறது.