மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு உதயநிதி ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நள்ளிரவில் அஞ்சலி செலுத்தினர்.
தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் அனைவரது இதயங்களிலும் இடம் பிடித்த நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலையில் பின்னடைவை சந்தித்தார். சிறிது கால இடைவெளிக்கு பின்னர் அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். ரோபோசங்கர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் படபிடிப்பு தளத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென நீர்சத்து குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் ரோபோ சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது கல்லீரல் முழுமையாக செயல் இழந்த காரணத்தால் அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு ரோபோசங்கர் காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

நள்ளிரவில் ஓடோடி வந்த பிரபலங்கள்
இந்நிலையில் ரோபோ சங்கரின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகர் தனுஷ், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று நள்ளிரவிலேயே ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
