துணை நடிகர் ஒருவர் போதை மருந்து கொடுத்து ஹோட்டல் அறையில் வைத்து என்னை பலாத்காரம் செய்துவிட்டதாக டிவி நடிகை போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நடிகை ஒருவர் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய துணை நடிகர் மீது  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கஹானி கர் கர் கி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள அந்த நடிகை தனது புகார் மனுவில் ஹரியானா மாநிலம் யமுனா நகரை சேர்ந்த துணை நடிகர் ஹோட்டல் அறையில் எனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு நான் கர்ப்பமாகிவிட்டேன். 

இதையடுத்து நான் அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், துணை நடிகர் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். நடிகரின் குடும்பத்தாருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிந்தும் அவர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளதுடன், தனக்கு உதவி செய்ய மறுப்பதாக நடிகை கதறியபடி கூறியுள்ளார். இந்த சம்பவம் மும்பை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.