நடிகர் சங்கத் தேர்தலில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் எடப்பாடி அரசின் உள்நோக்கம் கொண்ட தலையீடுதான் காரணம் என்பது இன்று வெட்ட வெளிச்சமானது. சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அதிர்ச்சிகரமான வாதம் ஒன்று இன்று வைக்கப்பட்டது அத்தனை நடிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நிலுவையில் இருக்கும் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23-ம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5ம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியதாகவும் அந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

அடுத்து அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என தெரிவித்தார்.மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் ரீல் சுத்தினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். தீர்ப்பு பெரும்பாலும் தமிழக அரசுக்கு சார்பாகவே வர வாய்ப்புள்ளதால் விரைவில் நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.