திரையரங்கு டிக்கெட் ரேட் உயர்கிறதா? மறுப்பு தெரிவித்த திருப்பூர் சுப்ரமணியன்!
திரையரங்கு டிக்கெட்டில் விலையை உயர்த்த கோரி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்ததாக வெளியான தகவலை, மறுத்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் பல புதுப்படங்கள் வெளியானாலும், திரையரங்கில் வெளியாகும் படத்தை பார்ப்பதற்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதே போல் நல்ல படங்களை திரையரங்கம் வந்து பார்க்கவும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் மற்றும் குடும்பத்தோடு படம் பார்க்க நினைப்பவர்கள், அடிக்கடி திரையரங்கம் வந்து படம் பார்க்க முடியவில்லை என கூறுவதற்கு முக்கிய காரணம், டிக்கெட் விலையை விட அங்கு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தான்.
இரண்டு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்தால், டிக்கெட் விலை இல்லாமல்... அவர்களுக்கு வாங்கி கொடுக்கும் சில தின்பண்டங்களுக்கே 1000 முதல் 1500 செலவாகிறது. அதுவும் மால் போன்ற இடங்களில் படம் பார்க்க சென்றால் ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 40 ரூபாய் வரை பார்க்கிங்கிற்கு வசூல் செய்கிறார்கள். ஏற்கனவே விலை வாசி உயர்வால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஏன் செலவு செய்யவேண்டும் என பலர் தங்களின் ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, சின்னத்திரையில் போடும் போது படம் பார்த்து கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்க, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீர் என டிக்கெட் விலையை உயர்த்த திரையரங்கள் உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்த நிலையில், தற்போது இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் கொடுத்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சினிமா டிக்கெட் விலை உயரப்போவதாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது உண்மை தான். ஆனால் அதனை " film exhibitors என்ற சங்கமே அறிவித்தது. திரையங்கு உரிமையாளர் சங்கம் அந்த கோரிக்கையை வைக்கவில்லை .டிக்கெட் விலை உயருவதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. என கூறியுள்ளார் இந்த தகவல் சினிமா ரசிகர்களை சற்று நிம்மதியடைய செய்துள்ளது.