‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில் 50 கோடி வசூலை நெருங்க முடியாமல் தவித்து வருகிறது.

Thug Life Box Office Collection:

‘நாயகன்’ படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. 38 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து இருந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டு வாரங்களை கடந்த நிலையில் ரூ.50 கோடி கூட வசூலை நெருங்க முடியாமல் படம் தவித்து வருகிறது. ‘நாயகன்’ திரைப்படம் திரை வரலாற்றில் ஒரு கிளாசிக் படமாக போற்றப்படும் நிலையில், அந்த படம் போலவே ‘தக் லைஃப்’ படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் டீசர் வெளியான பிறகு படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

பின்னடைவை சந்தித்த ‘தக் லைஃப்’

மேலும் படத்தில் சிலம்பரசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். ஏ.ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தில் துல்கர் சல்மான், பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் படத்திலிருந்து விலகியது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த படம் கேங்ஸ்டர் படம் என கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான பின்னர் கேங்ஸ்டர் கதையம்சத்திற்கான திரைக்கதை அமைக்கப்படவில்லை. இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. கதையின் மையமக்கரு தெளிவாக காட்டப்படாதது, தலைமை கதாபாத்திரத்தில் லட்சியம் என்ன என்பது தெளிவாக வலியுறுத்தப்படாதது படத்தின் ஆகியவை பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

‘தக் லைஃப்’ தோல்வியடைந்தற்கான காரணங்கள்

திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்ந்தது ரசிகர்களை பொறுமை இழக்க செய்தது. ஃப்ளாஷ்பேக் கதையுடன் நிகழ்கால கதையும் சேர்வதால் திரைக்கதையில் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டன. விரைந்து நகர வேண்டிய இடங்கள் ஆங்காங்கே தொய்வை ஏற்படுத்தின. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகள் தோல்வி அடைந்தன. பழைய பாணியிலான உரையாடல்கள் ரசிகர்களுக்கு சலிப்பை தந்தன. ஏ.ஆர் ரகுமான் இசை மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் அவரது பாணி பழையதாகவும், பாடல்கள் தேவையான இடங்களில் அல்லாமல் தவறான இடங்களில் இடம்பெற்றதும், பின்னணி இசை சோகமான காட்சிகளில் அபத்தமாக இருந்ததும் படத்தின் மதிப்பை குறைத்தன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “முத்தமிழை பாடல்..” படத்தில் இடம்பெறாதது போன்றவை படம் தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களாக பார்க்கப்பட்டது

வசூலை பாதித்த முக்கிய காரணிகள்

VFX காட்சிகள் பல இடங்களில் உண்மை சாயலின்றி விளங்கியது. ஆக்ஷன் காட்சிகள் நவீன சினிமாவிற்கு உகந்ததாக இல்லை. செயற்கைத்தனம் அதிகரித்து காணப்பட்டது. பிரம்மாண்டமாக வெளியான டீசர், டிரெய்லர், ப்ரோமோஷன் வீடியோக்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை வளர்த்தன. ஆனால் படம் வெளியான பின்னர் ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட பூர்த்தி செய்யவில்லை. படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்களை கூறி வந்தனர். ஃப்ரீ புக்கிங் தொடங்கி முதல் நாள் வரை வசூலில் நல்ல தொடக்கத்தில் இருந்த ‘தக் லைஃப்’ திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் சரிவைக் கண்டது. இரண்டாவது நாளிலிருந்து தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது. மேலும் வளர்ப்பு தந்தையின் காதலியை அடைய மகனுக்கும், தந்தைக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பது தமிழ் திரை ரசிகர்களுக்கு ஏற்ற திரைக்கதையாக இல்லை. இந்த கதை குறித்து பல ரசிகர்கள் விமர்சித்தனர். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இல்லை என்று ரசிகர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

கன்னட மொழி சர்சையில் சிக்கிய கமல்

மேலும் கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை. இதுவும் படத்தின் வசூலை வெகுவாக பாதித்தது. கமல் நீதிமன்றத்தை நாடிய போதும். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை. கமல் மன்னிப்பு கேட்கும் வரை திரைப்படம் வெளியாகாது என்று விநியோகஸ்தர்கள் கூறினார். நீதிமன்றமும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் கமலின் படத்தை வெளியிடப் போவதில்லை என்று கர்நாடக வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விநியோகஸ்தர்களும் படத்தை வெளியிடப் போவதில்லை என்கிற முடிவில் உள்ளனர்.

இரண்டாவது வார வசூல் விவரங்கள்

இது போன்ற பல பிரச்சனைகளால் தொடர் சரிவுகளை சந்தித்து வந்த ‘தக் லைப்’ திரைப்படம் இரண்டு வாரம் முடிவில் ரூ.47.65 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரம் ரூ.44 கோடி வசூலித்து இருந்த இந்த திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் கடும் சரிவை சந்தித்தது. ஒன்பதாவது நாள் ரூ.75 லட்சம், பத்தாவது நாள் ரூ.90 லட்சம், 11 ஆவது நாள் ரூ.90 லட்சம், பனிரெண்டாவது நாள் ரூ.35 லட்சம், 13-வது நாள் ரூ.30 லட்சம், 14 ஆவது நாள் ரூ.32 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. 15 வது நாளான வியாழக்கிழமை மாலை நிலவரப்படி சுமார் ரூ.13 லட்சம் மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டுன், மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.50 கோடியை கூட வசூலிக்க முடியாமல் திணறி வருவது கமல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘தக் லைஃப்’

‘தக் லைஃப்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய அடியை சந்தித்து வரும் நிலையில், இந்த படம் நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.