மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியாக உள்ள தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்‌ஷன் நிலவரத்தை பார்க்கலாம்.

Thug Life Pre Booking Collection : கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படம் தக் லைஃப். 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தின் மொத்த நீளம் 165 நிமிடங்கள். இதில் சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அசோக் செல்வன், அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, ஜிஷு சென்குப்தா, சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் ஷெரஃப், வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

தக் லைஃப் முன்பதிவு வசூல்

தக் லைஃப் திரைப்படத்தின் முன்பதிவு கடந்த ஜூன் 1ந் தேதி தொடங்கியது. உலகம் முழுவதும் இப்படத்திற்கான முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படம் முன்பதிவில் 15 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படமாக தக் லைஃப் மாற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கன்னடத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் கர்நாடகாவில் மட்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விக்ரம் படத்துக்கு அடுத்தபடியாக நடிகர் கமல்ஹாசன் பம்பரம் போல் சுழன்றபடி புரமோஷன் செய்த படம் தக் லைஃப் தான். இந்தியா மட்டுமின்றி மலேசியா, துபாய் என வெளிநாடுகளுக்கும் சென்று புரமோஷன் செய்துள்ளனர்.

மணிரத்னத்தின் வழக்கமான கூட்டாளிகளான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர். முன்னதாக மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் தான் தக் லைஃப்பின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். விக்ரம் படத்தில் கமலுடன் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றி உள்ளனர். தக் லைஃப்பின் ஒப்பனை ரஞ்சித் அம்பாடி, கலை இயக்குனர் ஷர்மிஷ்டா ராய், உடை வடிவமைப்பாளர் ஈகா லக்கானி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.