தக் லைஃப் படத்துக்கு போட்டியாக இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா?
ஜூன் மாதம் முதல் வாரத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

This Week Theatre Release Tamil Movies
2025-ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல் உள்ளது. ஆனால் அதற்குள் ஐந்து மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. தற்போது 6வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். கடந்த ஐந்து மாதங்களில் தமிழ் சினிமாவுக்கு பெரியளவில் வெற்றிப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இனி அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வர உள்ளன. இதனால் கோலிவுட் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
தக் லைஃப்
ஜூன் மாதம் தமிழ் சினிமா பிரம்மாண்ட படத்துடன் ஆரம்பமாகி உள்ளது. இம்மாதம், 5ந் தேதி மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி உள்ள தக் லைஃப் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள இதில் சிம்பு, திரிஷா, நாசர், அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி உள்ளார்.
பேரன்பும் பெருங்கோபமும்
தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பேரன்பும் பெருங்கோபமும். இப்படத்தை சிவப்பிரகாஷ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தை காமாட்சி ஜெயக்கிருஷ்ணன் தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். மைம் கோபி, அருள் தாஸ், தீபா, சாய் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வருகிறது.
பரமசிவன் பாத்திமா
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘பரமசிவன் பாத்திமா’. விமல் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, கூல் சுரேஷ், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 6ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மெட்ராஸ் மேட்னி
புதுமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு பாலசங்கரன் இசையமைத்து உள்ளார். இப்படமும் வருகிற ஜூன் 6ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.