தளபதி விஜய் தற்போது நடித்து வரும் சர்கார் திரைப்படம், இந்த ஆண்டு தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கான 90% படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது.

இப்படத்தினை இயக்கி இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ஏற்கனவே ஒரு பேட்டியின் போது, இந்த படத்தில் அரசியல் விமர்சனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகளும் இருந்தன. இந்த திரைப்படத்தில் தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் கட்சியை சார்ந்த, இரண்டு பிரபல அரசியல்வாதிகளை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூட கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது வெளியாகி இருக்கும் சமீபத்திய தகவலின் படி, சர்கார் படத்தில் இன்றைய விவசாயிகளின் நிலை பற்றியும், கார்பரேட் அரசியல் பற்றியும் வெகுவாக பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கதிராமங்கலம் பிரச்சனை, மீத்தேன் திட்டம் அதனை தொடர்ந்து இப்போது 8 வழி சாலை, என தமிழக அரசு கொண்டு வரும் பல திட்டங்களும், விவசாயிகளுக்கு எதிராகவும், கார்பரேட்டுகளுக்கு சாதகமாகவும் இருக்கின்றன, என பிரச்சனை போய் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், சர்கார் படம் கார்பரேட் அரசியல் பற்றி தைரியமாக பேசப்போவதாக வெளியேறி இருக்கும் தகவல், அதிரடி சரவெடியாக அமைந்திருக்கிறது.

இதனால் சர்கார் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. ஏற்கனவே மெர்சல் திரைப்படத்திலும் இதே போல தான் ஜி.எஸ்.டி மற்றும் மருத்துவத்துறை குறித்து விமர்சித்தது பல எதிர்ப்புகளை கிளப்பியது. அந்த எதிர்ப்பை எல்லாம் தாண்டி திரையில் ஏகோபித்த வெற்றி பெற்றது மெர்சல். இப்போது சர்கார் படமும் இதே போன்ற சமுதாய கருத்துக்களை, கதைக்களத்தில் கொண்டிருப்பது உண்மையானால், விஜயின் சர்கார் படமும் பல தடைகளை தகர்க்க வேண்டி இருக்கும்.