லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இடையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக வதந்தி பரப்பப்பட்டது. 

இதையடுத்து படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி அன்று மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. கொரோனா லாக்டவுனால் தியேட்டரில் மக்கள் கூட்டம் கூடுவது மிகவும் குறைந்து காணப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் வெளியானால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று திடீரென சந்தித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்பட ரிலீஸ் விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேலும் பொங்கலில் இருந்து தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. 

நடிகர் விஜய் வருவது தெரிந்தால் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதாலும், கொரோனா நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை தவிர்ப்பதற்காகவும் நேற்று இரவு சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கு படக்குழு கோரிக்கைவிடுத்தால் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.