தளபதி விஜய்க்கு, உலக அளவில் வெறித்தனமான ரசிகர் - ரசிகைகள் இருக்கும் நிலையில், ஏர் இந்தியா விமானம் பழுதாகி, ரஷ்யாவில் உள்ள ஒரு ஓட்டலில் பயணிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது ரஷ்ய பெண்மணி ஒருவர் தனக்கு விஜய் உள்பட பிடித்த இந்திய நடிகர்களின் பெயரை கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் இருந்து ஜூன் 7-ஆம் தேதி, சான் பிரான்சிஸ்கோ சென்று கொண்டிருந்த, ஏர் இந்தியாவின் இடைநில்லா விமானம் திடீர் என ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, ரஷ்யாவின் மகதானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 232 பயணிகளும் பத்திரமாக ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் என அனைத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் கவனித்து கொண்ட நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானம் மூலம் பிரான்சிஸ்கோ அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு நாட்கள் 232 பயணிகளும் ஒரே இடத்தில் தங்க வைத்த போது, ஒருவருக்கொருவர் ஆறுதலாக, பாடல்கள் பாடி பொழுதை கழித்தனர்.
பக்தி பாடல்கள் மற்றும் தங்களின் ஃபேவரட் பாடல்களையும் பாடி சந்தோஷத்தை பரிமாறிக்கொண்ட நிலையில், ரஷ்யாவை சேர்ந்த சிலரும், இந்திய மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு உதவிகள் செய்ய வந்தனர். அப்போது தளபதி விஜய் உட்பட மூன்று இந்திய பிரபலங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என ரஷ்யாவை சேர்ந்த ரசிகை ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. ரஷ்யப் பெண்மணி ஒருவர் அந்த வீடியோவில், தனக்கு ரிஷி கபூர், விஜய், மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரை பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
அதே போல் ஓட்டலில் அமர்ந்து இந்தியர்கள் சிலர் காயத்ரி மந்திரம் உச்சரிப்பதைப் பார்த்து ரஷ்யாவை சேர்ந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். பின்னர் தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் பலர், இந்த வீடியோவை பார்த்து, தளபதியின் புகழ் கடல் தாண்டி, உலக ரசிகர்களை சென்றடைந்துள்ளதாக கொண்டாடி வருகிறார்கள்.
