விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்ததாகவும், தவறான செய்திகளை பரப்பியதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய செயலாளராக இருந்த ரவிராஜா, துணை செயலாளராக இருந்து வந்த ஏ.சி.குமார் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கடந்த நவம்பவ மாதம் நீக்கப்பட்டனர். 

மேலும் இருவரும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களாக செயல்பட்டதாகவும் அவர் நடத்திய ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுத்ததாகவும் கூறப்படுகிறது. ரவிராஜா, ஏ.சி.குமார் இருவரையும் நடிகர் விஜய் சாலிகிராமத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்திருந்தார். மக்கள் இயக்க பொறுப்பிலிருந்து அவர்களை நீக்கியதை அடுத்து விஜய் இருவரையும் வீட்டை காலி செய்யும் படி அறிவுறுத்தியுள்ளார். 

ஆனால் இருவரும் வீட்டை காலி செய்ய முடியாது எனக்கூறி தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து விஜய்யின் வழக்கறிஞர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய்யின் சாலிகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள ரவிராஜா, ஏ.சி.குமார் ஆகியோரை காலி செய்ய வைக்கும் படி குறிப்பிட்டுள்ளார்.