தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் பாலகிருஷ்ணா, காரை மறித்து புகைப்படம் எடுக்க வற்புறுத்திய ரசிகர்களை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகின்றது.

 

பழம்பெரும் நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என் டி ராமராவின் ஆறாவது மகன் பாலகிருஷ்ணா. தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக திகழ்கிறார். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் இவர், ஹிந்துபூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் செல்லும் இடங்களிலெல்லாம் இவரை காண்பதற்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். அப்போது அவரைத் தொட முயல்வோர், புகைப்படம் எடுக்க வற்புறுத்தும் ரசிகர்களை கன்னத்தில் பளார் விடுவது இவரது பாணி. 

இந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று இடங்களில் இதுபோன்று நடிகர் பாலகிருஷ்ணா தனது ரசிகர்களை அடித்து உதைத்துள்ளார். அடிப்பதோடு மட்டுமல்லாமல் தம்மிடம் அடிவாங்கும் ரசிகர்கள் இதை அதிர்ஷ்டம் எனக் கருதுவதாகவும் கூறுவார். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் கம்மம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பாலகிருஷ்ணா சென்றபோது அவரது காரை வழிமறித்த ரசிகர்கள் செல்பி எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணா காரைவிட்டு இறங்கி வந்து ரசிகர்களை கன்னத்தில் அறைந்ததுடன் காலால் எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் 

இதையடுத்துகோபமுற்ற ரசிகர்கள் பாலகிருஷ்ணாவின் பேனர்களை அடித்து நொறுக்கியதுடன்  தீ வைத்து கொளுத்தினர். இது போன்ற முந்தைய சம்பவங்களில் ஆத்திரப்படாமல் பாலகிருஷ்ணா மீது தீவிர அன்பாகவே இருந்த ரசிகர்கள் தற்போது இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.