நடிகை சாய் பல்லவியை உருவகேலி செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதுவை ஆளுநர் தமிழிசையும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழில் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், தெலுங்கில் இவர் ஒரு ராசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு இவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டாவதால், அங்கு இவருக்கு மவுசு அதிகம். சமீபத்தில் இவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படமும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. இதையடுத்து மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக உருவகேலியை எதிர்கொண்டார். அவர் அவ லட்சணமாக இருப்பதாகவும், விதவிதமான கேமரா ஆங்கிள் மூலம் அவரை அழகாக திரையில் காட்டுகிறார்கள் என நெட்டிசன் ஒருவர் கேலி செய்திருந்தார். நெட்டிசனின் இந்த பதிவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தான் எதிர்கொண்ட உருவகேலி குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “என்னையும் உருவ கேலி செய்திருக்கிறார்கள். நான் அதை துணிச்சலாக எதிர்கொண்டேன். கருப்பி, குள்ளச்சி, பரட்டைனு கிண்டலடிச்சிருக்காங்க. சில சமயங்களில் அது மிகவும் காயப்படுத்தும். இவற்றையெல்லாம் தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும்” என தமிழிசை கூறியுள்ளார்.