லண்டனில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்த இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி சென்னையில் மீண்டும் நிகழ்த்தப்படவுள்ளது. 50 ஆண்டு கால திரையிசைப் பயணம் மற்றும் லண்டன் சிம்பொனி சாதனையை கொண்டாடும் விதமாக இந்த பாராட்டு விழா நடைபெறும்.
Ilaiyaraaja symphony : இளையராஜாவின் பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. அனைத்து தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்படுபவையாகும். இந்த நிலையில் லண்டனில் இளையராஜா கடந்த மார்ச் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்த இசை நிகழ்ச்சி உலகளவில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது. 35 நாட்களில் சிம்பொனியை உருவாக்கி, முதல் இந்தியராக இந்தப் பெருமையைப் பெற்றார் இளையராஜா. இதனையடுத்து இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இளையராஜாவிற்கு பாராட்டு விழா
இந்த விழா, இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையிசைப் பயணத்தையும், லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனி அரங்கேற்றம் மூலம் முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனியை முதல் இந்தியராக நிகழ்த்திய சாதனையையும் கொண்டாடும் வகையில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இசை நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில், சிம்பொனியில் சிகரம் தொட்ட தமிழன் -இசைஞானி இளையராஜாவின் பொன்விழா 50 ஆண்டு பாராட்டுவிழா வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேதி அறிவித்த தமிழக அரசு
13.9.2025, சனிக்கிழமை மாலை 5.30 மணி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிகழ்வில் லண்டனில் நடைபெற்ற சிம்பொனி மீண்டும் நிகழ்த்தவுள்ளார். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இசை ரசிகர்கள், நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
