தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதற்கு தடை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

Actress Aishwarya Rai privacy lawsuit : நடிகை ஐஸ்வர்யா ராய் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனது அனுமதியின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுவதாகவும், தனது தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

வணிக நோக்கங்களுக்காக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஐஸ்வர்யா ராய் தொடர்ந்த வழக்கு

நடிகை ஐஸ்வர்யா ராய் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேதி, ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக வாதிட்டார். தொடர்ந்து பேசிய அவர் "இது அதிர்ச்சியளிக்கிறது. அவரது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்டவை. நெருக்கமான புகைப்படங்கள் உள்ளன, முற்றிலும் உண்மைக்கு மாறானவை. ஐஸ்வர்யா ராயின் முகத்தையும் பெயரையும் வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்" என்று சேதி கூறினார்.

நடிகை ஐஸ்வர்யா ராய், கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினி கதாபாத்திரத்திலும் ஊமை ராணி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் எந்தப் படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. அவரின் கணவர் அபிஷேக் பச்சன் பாலிவுட்டில் பிசியான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.