Pratap Pothen passes away : நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்
Pratap Pothen : தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கிய பிரதாப் போத்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 69. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்து இருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் கடந்த 1978-ம் ஆண்டு ரிலீசான ஆரவம் என்கிற மலையாள படம் மூலம் திரையுலகில் நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். அதேபோல் தமிழில் பாலு மகேந்திரா இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து எராளமான படங்களில் நடித்து வந்த பிரதாப் போத்தன் கடந்த 1985-ம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இதையும் படியுங்கள்... சூர்யாவுக்கு கமல் கொடுத்த ‘ரோலெக்ஸ் வாட்ச்’ பரிசல்ல.. பொக்கிஷம்- அதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சீக்ரெட் இருக்கா
அதன்படி இவர் இயக்கிய முதல் படம் மீண்டும் ஒரு காதல் கதை. இப்படத்தை ராதிகா தயாரித்திருந்தார். இதில் ராதிகாவும், பிரதாப் போத்தனும் ஜோடியாகவும் நடித்திருந்தனர். இதையடுத்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து ஜொலித்து வந்த பிரதாப் போத்தன் அடுத்தடுத்து பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்தார்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரதாப் போத்தன், இன்று காலமானார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அவரது மறைவு திரையுலகினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிரதாப் போத்தனின் மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...ரூ.1000 கோடி சம்பளம் கொடுத்தால் தான் தொகுத்து வழங்குவேன்... பிரபலத்தின் கண்டிஷனால் கலங்கிப்போன பிக்பாஸ்