மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டது குறித்து, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
Tamannaah Bhatia Mysore Sandal Soap Controversy : கே.எஸ்.டி.எல்.-ன் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமன்னாவை நியமித்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவை நியமித்ததில், மாநிலத்தின் நலன்தானா அல்லது அரசியல்வாதிகளின் நலன்தானா என்பது தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தமன்னாவுக்கு 6.5 கோடி சம்பளம்
ஒரு வருடத்தில் ரூ.60 லட்சம் லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமன்னாவுக்கு ரூ.6.5 கோடி வழங்கியுள்ளனர். இது சரியல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். தமன்னாவைத்தான் நியமிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தகுதியானவர்களைப் பரிசீலிக்க வேண்டும். நடிகையைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. சந்தைப்படுத்தல் நோக்கில் யோசிக்க வேண்டும் என்று கூறியதன் மூலம், தமன்னா தகுதியானவர் அல்ல என்று மறைமுகமாக விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
தமன்னாவுக்கு கடும் எதிர்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், தமன்னாவை நியமித்ததற்கு பதிலாக கன்னட நடிகைகள் இலவசமாகவே பிராண்ட் அம்பாசிடராக இருந்திருப்பார்கள் என்றும் தமன்னாவுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பது சரியல்ல எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, தனது உறவினரும் நடிகருமான சிவராஜ்குமார், தமிழ் படமான 'ஜெயிலர்'-ல் நடிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பி கிண்டலடித்தார்.
அரசை விமர்சித்த விஜயேந்திரா, 'ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை ஒடுக்கும் வேலையைச் செய்கிறது. முன்பு எங்கள் எம்.எல்.ஏ. பாரத் ஷெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் படுகொலை. குற்றப்பத்திரிகையை நாங்கள் வெளியிட்டோம். அரசின் பணத்தை வீணடித்து, திருவிழா நடத்தத் திட்டமிட்டிருந்தனர்' என்று குற்றம்சாட்டினார்.
