மைசூர் சாண்டல் பிராண்ட் தூதரானார் தமன்னா.! திட்டி தீர்க்கும் கன்னட மக்கள்
இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பலரால் விரும்பப்படும் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அரசு எடுத்துள்ள இந்த முடிவு இணையத்தில் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

மைசூர் சாண்டல் சோப்பின் வரலாறு
மைசூர் சாண்டல் சோப்பின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. 1916-ம் ஆண்டு மைசூர் மகாராஜா நான்காம் கிருஷ்ண உடையார், முதல் உலகப்போரால் ஏற்பட்ட சந்தன ஏற்றுமதி தடையால் தனது ராஜ்யத்தில் குவிந்த கடந்த சந்தன மரங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். அப்போது பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் விஞ்ஞானியான விஸ்வேஸ்வரய்யா சந்தன எண்ணையை சோப் தயாரிப்பில் பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினார். இதன் விளைவாக 1916-ம் ஆண்டு மைசூர் அரச குடும்பத்தால் மைசூர் சாண்டல் சோப் தொழிற்சாலை பெங்களூருவில் நிறுவப்பட்டது.
பிராண்ட் தூதராக தமன்னா நியமனம்
கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட் நிறுவனம், 1918-ம் ஆண்டு முதல் சோப் உற்பத்தி செய்து வரும் முதல் அரசுத்துறை நிறுவனமாகும். கர்நாடகாவின் வனப்பகுதிகளில் இருந்து பெறப்படும் உயர் சந்தன மரங்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு, 100% தூய இயற்கை சந்தன எண்ணெய் கொண்டு மைசூர் சாண்டல் சோப் தயாரிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் ஒரு கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ள மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக நடிகை தமன்னா கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமன்னாவுக்கு ரூ.6.2 கோடி சம்பளம்
தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 28.2 மில்லியன் பின்தொடர்பவர்களையும், ட்விட்டர் பக்கத்தில் 5.8 மில்லியன் பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளார். இந்திய அளவிலான நடிகையாக இருக்கும் அவர் தனது தொழில் வாழ்க்கையில் பல பிராண்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதுவராக அவர் நியமிக்கப்பட்டதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.6.2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பலர் தமன்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சிலர் கர்நாடக அரசின் இந்த முடிவு குறித்து எதிர்வினையாற்றி வருகின்றனர்.
தமன்னாவை விமர்சிக்கும் கன்னட மக்கள்
கன்னட திரைப்பட துறையைச் சேர்ந்த உள்ளூர் திறமையாளர்கள் பலர் இருக்கும் நிலையில், அவர்களை தவிர்த்து விட்டு பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்தது ஏன் என கன்னட அரசிற்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சாண்டல்வுட்டில் திறமைக்கு பஞ்சமா? உள்ளூர் கலைஞர்களையும், கலாச்சாரத்தையும் மேம்படுத்தாதது ஏன்? உள்ளூர் நடிகைகளை பிராண்ட் தூதராக நியமிக்காமல் ஹிந்தி நடிகைகளை நியமித்தது ஏன் என கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டீலை எக்ஸ் வலைதளப்பக்கத்தில் டேக் செய்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கர்நாடக வர்த்தகத்துறை அமைச்சர் விளக்கம்
நெட்டிசன்களின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எம்.பி பாட்டீல், “மைசூர் சாண்டல் சோப் ஏற்கனவே கர்நாடகாவில் பெரும் மதிப்பை கொண்டுள்ளது. இருப்பினும் இந்த சோப்பை கர்நாடகாவிற்கு அப்பால் உள்ள சந்தைகளில் கொண்டு தீவிரமாக செல்வதே நோக்கமாகும். சந்தைப்படுத்துதல் நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2028-ம் ஆண்டுக்குள் சைசூர் சாண்டல் நிறுவனத்தின் வருவாயை ரூ.5,000 கோடியாக அதிகரிப்பதே இதன் நோக்கம்” என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

