Rajini : சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் "கிளாசிக் நடிகர்"?.. கேமியோவில் "கிங் கான்"? - தலைவர் 171 அப்டேட்!
Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
பொதுவாகவே லோகேஷ் கனகராஜின் படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் பொழுது, அதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவது உண்டு. ஆனால் இந்த முறை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை லோகேஷ் இயக்க உள்ள நிலையில் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்றே கூறலாம்.
அந்த வகையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து இந்த திரைப்படத்தில் நடிக்க போவது யார் யார்? என்பது குறித்த யுகங்கள் இணையத்தில் எழுந்தவாறு உள்ளது. ரன்வீர் சிங், சோபனா, திரிஷா, சிவகார்த்திகேயன், என்று பல முன்னணி நடிகர், நடிகைகளின் பெயர்கள் தொடர்ச்சியாக தலைவர் 171 படத்தோடு இணைத்து பேசப்படுகிறது.
இந்த சூழலில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி தலைவர் 171 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான "மைக்" மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை அவருடன் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே போல லோகேஷ் கனகராஜ் இந்த படத்திலும் மக்கள் செல்வனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
அதேபோல பாலிவுட் உலகில் "கிங் கான்" என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் ஷாருக்கான் இந்த திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கேமியோ கதாபாத்திரங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேடையில் ஷாருக் கான் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்டபோது..
சில காலம் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருக்கப்போவதாக கான் கூறியது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சூப்பர் ஸ்டார் படம் என்பதால் அவர் ஒப்புக்கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் படத்தில் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பது படக்குழுவிற்கு மட்டுமே வெளிச்சம்.