நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
Sundeep Kishan's Birthday: Special Glimpses of the New Film Released! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இவ்வீடியோவில், படப்பிடிப்பு தளத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக பணியாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்
'ஜேசன் சஞ்சய் 1' என்பது படத்தின் தற்காலிக தலைப்பு. இப்படத்தில் படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவு பணிகளை கிருஷ்ணன் வசந்த் மேற்கொள்கிறார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் திரைப்பட இயக்கம் பயின்ற ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தை இயக்குகிறார். டொராண்டோ திரைப்படப் பள்ளியில் 2020-ல் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பட்டம் பெற்ற ஜேசன், லண்டனில் திரைக்கதை எழுத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
மகனை ஹீரோவாக்க ஆசைப்பட்ட விஜய்
விஜய்யின் மகன் இயக்கும் முதல் படம் என்பதால், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜேசனை நாயகனாக வைத்து பலர் படமெடுக்க முன்வந்தனர். விஜய்க்கும் அதுவே ஆசையாக இருந்தது. தான் சினிமாவை விட்டு விலகுவதால் மகனை ஹீரோவாக்கி பார்க்க ஆசைப்பட்டார் விஜய். தனது மகனை நாயகனாக வைத்து படம் இயக்க கதை சொன்னவர்களில் அல்போன்ஸ் புத்திரனும் ஒருவர் என்று நடிகர் விஜய்யே ஒருமுறை கூறியிருந்தார்.
மகன் பற்றி விஜய் சொன்னதென்ன?
"அல்போன்ஸ் புத்திரன் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார். நான் சம்மதித்தேன். அவர் வந்து எனது மகனை மனதில் வைத்து ஒரு கதை எழுதியுள்ளதாக கூறினார். அது ஒரு நல்ல கதையாக இருந்தது. சஞ்சய் அதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நானும் நினைத்தேன். நான் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என கூறினார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோஷம்" என்று விஜய் கூறியிருந்தார்.


