பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த மாதம் 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்ற கூட்டு பிரார்த்தனைக்கு பின்னர் எஸ்.பி.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையால் மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி. முற்றிலும் சீரான நிலைக்கு வந்தார். நீண்ட நாட்களாக மயக்க நிலையில் இருந்து பூரணமாக மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தாலும் எஸ்.பி.பி. மருத்துவர்கள் கூறுவதை புரிந்து கொள்வதாகவும், கூழ்ம உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் எஸ்.பி.பி. உடல்நிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் எக்மோ, வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காகும் சிகிச்சைகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எஸ்.பி.பி. உடல் நலம் குறித்து சிறப்பு மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைக்கேள்விப்பட்ட உலக நாயகன் கமல் ஹாசன் உடனடியாக மருத்துவமனை விரைந்தார். அங்கு மருத்துவர்களிடம் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது எனக்கூறியது அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை உறுதிபடுத்தியது. 

தற்போது எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து சுமார் 11 மணி அளவில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாக உள்ளதாக அங்குள்ள செய்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து தினமும் ரசிகர்களுக்கும், மீடியாக்களும் கூறி வரும் அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தற்போது மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அப்பாவின் உடல் நிலை குறித்து ஆலோசிப்பதற்காக மருத்துவர்கள் குழு அவரை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.