பிரபல பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த மாதம் 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்ற கூட்டு பிரார்த்தனைக்கு பின்னர் எஸ்.பி.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

தொடர்ந்து 51வது நாளாக எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சமயத்தில், நேற்று முதல் அவருடைய உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்தது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் எக்மோ, வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காகும் சிகிச்சைகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எஸ்.பி.பி. உடல் நலம் குறித்து சிறப்பு மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. 

 

இதையும் படிங்க: மருத்துவமனை விரைந்தார் எஸ்.பி.பி.சரண்... சற்று நேரத்தில் வெளியாகிறது எஸ்.பி.பி. உடல் நிலை குறித்த அறிக்கை?

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் எஸ்.பி.பி. நலம் பெற வேண்டி வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி.சரண் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு அவருடன் மருத்துவர்கள் குழு அடுத்தக்கட்ட சிகிச்சை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எஸ்.பி.பி.யின் தற்போதைய உடல் நிலை மற்றும் அடுத்து என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கலாம் என சரணிடம் விளக்கி வருகிறார்களாம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தலைசிறந்த மருத்துவர்களுடனும் காணொலி மூலமாக அறிவுரைகள் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகள், மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனை வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.