சின்னத்திரை நடிகை ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் சம்பளம் வாங்கி உள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவரும் சின்னத்திரை நடிகர்கள்
வெள்ளித்திரை நடிகர்களைப் போலவே சின்னத்திரை நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி நிறுவனங்களும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் பல சீரியல்கள் ஆண்டு கணக்கில் ஓடி வெற்றியும் பெற்றுள்ளன. தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சுமார் ஏழு ஆண்டுகள் ஒளிபரப்பாகி அதிக ஆண்டுகள் ஒளிபரப்பான சீரியல் என்கிற பெருமையை பெற்றது.

சின்னத்திரை நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு
வெள்ளித்திரை நடிகர்களைப் போலவே, சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் அதிக வரவேற்பு தருகின்றனர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக சமூக வலைதளப் பக்கங்களில் அவர்களை பின்தொடர்ந்து, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்கின்றனர். திருமணம், வளைகாப்பு, வீட்டில் நடக்கும் விசேஷங்கள், புதுமனை புகுவிழா என அனைத்து தகவல்களையும் சின்னத்திரை நடிகர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கம் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் பலர் youtube சேனல்களையும் நடத்தி வருகின்றனர்.

அதிக சம்பளம் வாங்கிய ஸ்மிருதி இரானி
இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். அவர் நடிகையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி ஆவார். சின்னத்திரை நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஃபேஷன் மாடல், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நடிகை என பன்முகத்திறமையாளராவார். இவர் முதல் முறையாக ‘கியூங்கி சாஸ் பி கபி பஹூதி’ என்கிற தொலைக்காட்சி தொடரில் ‘துளசி இரானி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் நீண்ட காலம் ஓடிய தொடர்களில் இதுவும் ஒன்று.
ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் வாங்கிய ஸ்மிருதி
இவருக்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ரூ.8,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொடரின் பிரபலம் அதிகரித்த பின்னர் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை சம்பளம் பெற்றாராம். அதன் பின்னர் ‘கியூங்கி சாஸ் பி கபி பஹூதி’ தொடரின் புதிய சீசனில் நடிப்பதற்காக அவர் ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது இந்திய சின்னத்திரை நடிகைகள் வாங்கிய சம்பளத்திலேயே அதிகபட்ச சம்பளமாகும். சில காலத்திற்குப் பின்ன் திரைத்துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்த அவர், 2003 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2011 முதல் 2024 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2019-ல் அமேதி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஸ்மிருதி
பின்னர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட அவர், மனிதவள மேம்பாடு, ஜவுளித்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, சிறுபான்மையினர் விவகாரங்கள் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவினார். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து, பின்னர் வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் ஸ்மிருதி இரானி தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
