சிவகார்த்திகேயன் தெலுங்கில் முதல் முறையாக கால் பாதிக்கும் SK 20 படத்தின் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் இன்று காலமானார்
தெலுங்கு திரையுலகில் பல தலைமுறை நடிகர்களை பார்த்தவர் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங். இவர் விநியோகஸ்தர், நிதியாளர், ஆசிய குழுமம் & குளோபல் சினிமாஸ் தலைவர், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் என பிரபலமாக இருப்பவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் SK 20 படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் 76 வயதை கடந்த நாராயண் தாஸ் நரங் உடல்நலக்கோளாறு காரணமாக இன்று ஹைதராபாத்தில் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மகன்கள் சுனில் நரங் மற்றும் பரத் நரங் ஆகியோரும் திரைப்பட தயாரிப்பாளர்கள்.

மறைந்த நாராயண் தாஸின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு மகாபிரஸ்தானத்தில் நடைபெற்றது. முன்னதாக தயாரிப்பாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிரஞ்சீவி , "திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ஸ்ரீ நாராயணதாஸ் நரங் கேரிக்கு அஞ்சலி" என்று ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல நாராயண் தாஸ் நரங் உடனான புகைப்படத்தை மகேஷ் பாபு சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டு, "நாராயணதாஸ் நரங் காருவின் மறைவு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. நமது திரையுலகில் ஒரு சிறந்த ஆளுமை. அவருடன், அவரது தொலைநோக்கு பார்வையும், சினிமா மீதான ஆர்வமும் நம்மில் பலருக்கு உத்வேகமாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் பலமும் இரங்கலும்."
இவரை தொடர்ந்து இரங்கல் பதிவிட்ட சிவகார்த்திகேயன் அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, "எங்கள் அன்பான தயாரிப்பாளர் ஸ்ரீ நாராயண் தாஸ் நரங் சாரின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். சுனில் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
