மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருந்தாலும், அவர் பணியாற்றியது ஒரே ஒரு இசையமைப்பாளருடன் தான்.
எளிய குடும்பத்தில் பிறந்தாலும், உழைப்பினால் உயர்ந்தவர்கள் சிலர். அந்தச் சிலரில் ஒருவர் உலக புகழும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். திரைப்படப் பின்னணி பாடகிகளில் பாரத ரத்னா விருது பெற்ற ஒரே பாடகி என்ற பெருமையைப் பெற்றவர் லதா மங்கேஷ்கர். 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விருதினை அவர் பெற்றார்.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இது லதாவுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடவில்லை. உலகிலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை 30 ஆயிரம் பாடல்களைப் பாடிய பாடகி என்ற உலக சாதனையை நிகழ்த்திய பின்னரே “பாரத ரத்னா” விருது கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் இரசிகர்களைக் கொண்ட லதா, மத்திய பிரதேசத்தில் இந்தூர் அருகில் உள்ள சிக் மொகல்லா என்ற இடத்தில் 1929-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் - சுதாமதி தம்பதியினரின் செல்ல மகள் லதா. லதாவின் முன்னோர்கள் மங்கேஷி என்ற கிராமத்திலிருந்து வந்தவர்களாதலால், மங்கேஷ்கர் என்பது குடும்பப் பெயராகியது. லதாவின் இயற்பெயர் ஹேமா. செல்லமாக அழைத்து வந்த லதா என்பது நிலைத்து விட்டது.

லதாவின் தந்தை தீனாநாத் நாடக நடிகரும், பாடகரும் ஆவார். சொந்தமாக நாடகக் குழுவும் வைத்திருந்தார். இதில் குழந்தை நட்சத்திரமாக லதா நடித்திருக்கிறார். முதன் முதலாக அவர் மேக்கப்போட்டு நடித்தது நாரதர் வேடத்தில்.
1934-இல் பேசும் சினிமாப் படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியதால், நாடகங்களுக்கு வசூல் குறைந்தது. அதனால் லதாவின் குடும்பம் சிரம திசையை சந்திக்க வேண்டியதாயிற்று. லதாவுக்கு 12 வயது நடந்த போது, தந்தை இறந்து போனார். மூன்று தங்கை, ஒரு தம்பியுடன் நிராதரவானார் லதா. தம்பியும் எலும் புருக்கி நோயினால் படுத்த படுக்கையில் இருந்தான். சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் லதாவிற்கு ஏற்பட்டது.
தந்தையின் நாடகங்களில் நடித்தும், பாடியும் பெற்றிருந்த அனுபவம் சினிமா உலகில் நுழையும் விருப்பத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் துணை நடிகையாக நடித்தார். 9 படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். “சட்டிஹாசல்” என்ற மராத்தி படத்தில் பின்னணியில் பாடும் வாய்ப்பு பெற்றார்.

இதன் பின் ஏராளமான இந்திப்பாடல்களை பாடி பிரபலமடைந்த லதா மங்கேஷ்கர். நேரடி தமிழ் படத்துக்காக பாடியது 1987-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ஆனந்த் என்கிற படத்துக்காக ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை இளையராஜா இசையில் பாடினார் லதா மங்கேஷ்கர். அதன் பிறகு 1988-ல், இளையராஜா இசையில் கமல் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை கலகலவென’ என்கிற பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் ரசிகர்கள் மனதில் இன்றளவும் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
பின்பு அதே ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்கிற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்தும், சோலோவாகவும் பாடியிருந்தார். இந்தப் படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசை. அதன்பிறகு அவர் தமிழில் வேறெந்த பாடல்களையும் பாடவில்லை.
