தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களில் ஒன்று பாலியல் தொந்தரவு. பாலியல் குற்றங்கள் சம்பந்தமான புகார்களும் சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான நடிகை அமலாபால் மற்றும் நடிகை சனுஷா ஆகியோர் தானாக முன்வந்து போலீசாரிடம் புகார் கூறியது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது அவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும், இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைரியமாக பதிவு செய்த போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அதில் குறிப்பிட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக சின்மயி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்து குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் என யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள பயம் கொள்வதால், பகிர்ந்துக்கொள்ளும் போது அவர்களுக்குள் பிறக்கும் வலிமையை அவர்கள் உணர்வதில்லை. 

மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக கூறுகிறேன், உங்கள் சம்மதம் இன்றி உங்களை தொடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர் குறித்து அனைவரிடமும் பகிருங்கள். நான் அமைதியாக இருந்தால் குற்றம் செய்பவன் அதனை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவான் என்று சின்மயி கூறியுள்ளார்.