அடுத்த படம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியாத நிலையிலும், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தாய்லாந்து தலைமறைவிலிருந்து நடிகர் சிம்பு நேற்று சென்னை திரும்பியதால் இன்று காலை முதலே ட்விட்டரில் ட்ரெண்டிங்கிலேயே உள்ளார். அவர் இனி படங்களில் நடிக்க ரெட் போடப்படும் என்று தகவல்கள் நிலவி வரும் நிலையில் ,...தலைவா இனி திரைப்படம் வேண்டாம் எங்களுக்கு உன் புகைப்படம் மட்டுமே கூட போதும்’என்று அவரது ரசிகர்கள் கூவி வருகின்றனர்.

கடைசியாக இவ்வருடம் பிப்ரவரி 1ம் தேதியன்று சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ ரிலீஸாகி வழக்கம்போல் ஊத்திக்கொண்டது. அப்போதும் அடங்காத சிம்பு அடுத்த படத்துக்கு வரவே மாட்டேன் என்று அடம்பிடித்து எந்தப் படத்துக்கும் நடிக்கப்போகாமலிருந்தார். லண்டனுக்குப் போய் உடலைக் குறைக்கிறார். இதோ படப்பிடிப்பு...அதோ படப்பிடிப்பு என்று சவ்வாக இழுத்த ‘மாநாடு’படமும் தயாரிப்பாளரும் இயக்குநரும் பொறுமை இழந்ததால் சிம்பு கையை விட்டுப்போனது. நடுவில் கவுரவ வேடத்தில் நடித்த ஒரு கன்னட ரீமேக் பட ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன சிம்பு தாய்லாந்தில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் கிடைக்க ஒரு வழியாக நேற்றுதான் சென்னை திரும்பியிருக்கிறார்.

ஹிட் படம் கொடுக்கிறாரோ இல்லையோ சிம்புவுக்குப் பின்னாலும் ரசிகர்கள் என்ற பெயரில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது. இன்று சென்னையில் இரண்டு மாதங்களாக மழிக்காத தாடி மட்டும் சிலுப்பிய முடியுடன் வந்த சிம்புவின் கெட் அப்பைப் பார்த்து சிலிர்த்த அவர்கள் காலை முதலே சிம்பு இஸ் பேக் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஹேஸ்டேக் உருவாக்கி அதை தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர்.

இன்னொரு பக்கம் மனம் திருந்தி வீடு திரும்பிய மைந்தனுக்கு ஏகப்பட்ட அறிவுரைகள் சொன்ன டி.ராஜேந்தர், ’பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் நம்ம மேல கொலவெறியில இருக்காங்க. இதுக்கும் மேல ஒரு நடிகன் அசிங்கப்படக்கூடாது. அதனால அரசியல், மன்றம்னு பேசி நேரத்தை வீணடிக்காம சீக்கிரம் ஒவ்வொரு தயாரிப்பாளர் கால்லயும் விழுந்து வரிசையா படங்கள் நடிக்கிற வழியைப் பாரு’என்று அட்வைஸ் செய்திருக்கிறாராம். அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத சிம்பு,’சனி ஞாயிறுகள்ல எப்படி மேக் அப் போடுறதில்லையோ அது மாதிரி யாரோட அட்வைஸையும் கேக்குறதில்ல. திங்கட்கிழமை மீட் பண்ணலாம்’என்று பார்ட்டிகளுக்குக் கிளம்பிவிட்டாராம்.