பாலிவுட்டில் பிரபலங்களின் பேஷன் தனிக்கவனம் ஈர்க்க கூடியது, ஒவ்வொருவரும் தங்களை அலங்கரிக்க தனி டீமையே வைத்திருப்பார்கள். பார்ட்டி, பங்ஷன், சினிமா நிகழ்ச்சி என அனைத்திற்கும் பாலிவுட் நடிகர், நடிகைகள் அணிந்து வரும் உடைகள் மற்றும் நகைகள் சோசியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டாவது வழக்கம். அதனை மேலும் கவுரவிக்கும் விதமாக "தி பவர் லிஸ்ட் 2019" என்ற விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. வோக் இந்தியா மற்றும் நைக்கா பேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், இந்த ஆண்டு பேஷன் மற்றும் கிளாமரில் சிறந்து விளங்கிய பாலிவுட் பிரபலங்களுக்கு  விருதுகள் வழங்கப்பட்டன. 

ஆண், பெண் உடை, அணிகலன்கள் உள்ளிட்ட 13 சிறப்பு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. இந்த பிரிவுகளில் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை மக்கள் வாக்களித்து தேர்வு செய்தனர். வளர்ந்து வரும் ஆண் ஃபேஷன் ஸ்டார், வளர்ந்து வரும் பெண் ஃபேஷன் ஸ்டார், ரைசிங் ஸ்டார் ஆண் மற்றும் பெண் உள்ளிட்ட விருதுகளுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக நைக்காவின் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற பாலிவுட் ஸ்டார்களுக்கு பிரம்மாண்ட விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்த ஆண்டின் மிகவும் ஸ்டைலான ஜோடி என்ற விருதை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், கவுரி கான் தம்பதி தட்டிச் சென்றனர். தீபிகா - ரன்வீர், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் என பாலிவுட் இளம் தம்பதிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஷாரூக்கான் - கவுரி ஜோடி விருதை பெற்றது. இதனையடுத்து அந்நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் ஸ்டைலிஷ் ஜோடிக்கு ஷாரூக்கான் ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் பிரிவில் ஸ்டைல் ஐகான் ஆப் த இயர் (Style Icon Of The Year)விருதை அனுஷ்கா சர்மாவும், ஆண்கள் பிரிவில் அக்‌ஷய் குமாரும் தட்டிச் சென்றனர்.