ஜவானில் ஸ்டைலிஷ் வில்லனாக விஜய் சேதுபதி... வைரலாகும் மக்கள் செல்வனின் மாஸ் லுக் போஸ்டர்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கேரக்டர் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இப்படம் தேசிய விருதும் வென்றது. இப்படத்திற்கு பின்னர் பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தர்மதுரை, சேதுபதி, 96 என தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதியை வில்லனாக அறிமுகப்படுத்தியது கார்த்திக் சுப்புராஜ் தான், அவர் இயக்கிய பேட்ட படம் மூலம் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார் மக்கள் செல்வன்.
பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த பின்னர் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் வில்லன் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதையடுத்து மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பவானி என்கிற டெரரான கதாபாத்திரத்தில் நடித்து தனது வில்லன் இமேஜை ஏற்றிக்கொண்டார். பின்னர் தெலுங்கில் இவர் வில்லனாக நடித்து வெளிவந்த உப்பென்னா என்கிற திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
இதையும் படியுங்கள்... தன்னம்பிக்கையும், லட்சியமும் இருந்தால் வெற்றி நிச்சயம் - கல்லூரி விழாவில் ஈரோடு மகேஷ் பேச்சு
இப்படி தமிழ் தெலுங்கில் வில்லனாக கலக்கி வந்த விஜய் சேதுபதியை பான் இந்தியா அளவில் கொண்டு சேர்ந்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக சந்தனம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அப்படத்தில அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போன பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ஆவலோடு காத்திருந்தார்.
அந்த சமயத்தில் தான் இயக்குனர் அட்லீ சொன்ன ஜவான் கதையை கேட்டதும், விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்தார் ஷாருக். அவரின் அழைப்பை ஏற்று விஜய் சேதுபதியும் அப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், ஜவான் படத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதியின் வில்லன் லுக் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் வில்லனாக காட்சியளிக்கிறார் விஜய் சேதுபதி. அந்த போஸ்டரின் மரண வியாபாரி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் இப்படத்தில் அவருக்கு செம்ம மாஸான ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி வசூலித்ததா சிவகார்த்திகேயன் படம்? மாவீரன் படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ