ஷாருக் கானின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான 'கிங்' படத்தின் டைட்டில் ரிவீல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஜவான் படத்திற்கு பின்னர் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

Shah Rukh Khan King movie teaser : ஷாருக் கான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அவரது அடுத்த படமான 'கிங்' படத்தின் டைட்டில் ரிவீல் டீசர் வெளியாகியுள்ளது. ஷாருக் கானின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். 1.11 நிமிடம் நீளமுள்ள இந்த வீடியோ, ஒரு புதிய ஷாருக் கான் அனுபவத்தை வழங்கும் படமாக இது இருக்கும் என்ற குறிப்பைக் கொடுக்கிறது. ஷாருக் கானுக்கு மாபெரும் கம்பேக் கொடுத்த 'பதான்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் கதை மற்றும் தயாரிப்பிலும் சித்தார்த் ஆனந்த் பங்கு வகிக்கிறார்.

ஷாருக்கின் கதாபாத்திரத்தின் குரல் பின்னணியில் டைட்டில் ரிவீல் டீசர் தொடங்குகிறது. "நான் எத்தனை கொலைகள் செய்தேன் என்று நினைவில் இல்லை. அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. அவர்களின் கண்களில் நான் ஒன்றே ஒன்றை மட்டும் கண்டேன். இது அவர்களின் கடைசி மூச்சு என்ற உணர்வு, அதற்குக் காரணம் நான்தான்," என்பதே அந்த வசனம். இதன் மூலம், இப்படத்தின் பிரம்மாண்டமான நிழல் உலகப் பின்னணியை இயக்குனர் சுட்டிக்காட்டுகிறார்.

ஷாருக்கானின் கிங் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

ஷாருக் கான் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் படம் என்ற வர்ணனையுடன், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் டீசரில் அவர் தோன்றியுள்ளார். வெள்ளி நிற முடியுடன், கூலிங் கிளாஸ் மற்றும் ஸ்டைலான உடையில் அந்த கதாபாத்திரம் திரையில் தோன்றுகிறது. இப்படம் 2026-ல் திரையரங்குகளில் வெளியாகும். 'பதான்' படத்திற்குப் பிறகு ஷாருக் கானும் சித்தார்த் ஆனந்தும் இணையும் படம் என்பதால், 'கிங்' படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். ஜவான் படத்திற்கு பின்னர் ஷாருக்கான் உடன் அவர் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.

2023-ல் வெளியான மூன்று படங்களுக்குப் பிறகு (பதான், ஜவான், டங்கி) ஷாருக் கானின் எந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதனால், மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியாகும் 'கிங்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஷாருக் கானின் மகள் சுஹானா கானுடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வர்சி, ராணி முகர்ஜி, ராகவ் ஜுயல், அபய் வர்மா, சௌரப் சுக்லா, ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்டோர் இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Scroll to load tweet…