தமிழில் இருந்து பிரிந்தது தான் கன்னடம் என கமலஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக சீமான் கன்னடர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘தக் லைஃப்’ புரோமஷன் பணிகள் 

‘தக் லைஃப்’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கன்னடம் குறித்து பேசிய கமல்

இந்த விழாவில் பேசிய கமலஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சுட்டிக்காட்டி, அவர் வேறு மாநிலத்தில் வசிக்கும் தனது குடும்பம் எனக் குறிப்பிட்டார். மேலும் கன்னடம் தமிழில் இருந்து உருவானது என கமல் கூறினார். கமலின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கமலின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது ஆணவத்தின் வெளிப்பாடு என்றும், கன்னடத்தை அவமதிக்கும் விதமாக பேசிய கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

கமல் பேசியது குறித்து சீமான் கருத்து

கர்நாடகாவில் இந்த பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில், படத்தின் புரோமோஷனுக்காக பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த ‘தக் லைஃப்’ பட போஸ்டர்களை கிழித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த படத்தை கர்நாடகாவில் தடை செய்ய போவதாக எச்சரித்தனர். இதனால் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியாகுமா என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த சீமானிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

வரலாறு தெரியாதவர்கள் - சீமான் விமர்சனம்

அப்போது பேசிய அவர், “உண்மையை உணராத கூட்டம். தன் இன வரலாற்றையே அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். 1800 ஆண்டுகளுக்கு முன்பு தமிழிலிருந்து சமஸ்கிருதம் கலந்து கலந்து பேசியதால் பிளந்து பிரிந்த முதல் மொழி கன்னடம். 1600-ல் தெலுங்கு பிறக்கிறது. 15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு மலையாளம் பிறக்கிறது. அந்த மாநிலத்தில் இருக்கும் தொல்லியல் அறிஞர்கள், மொழி ஆய்வாளர்களுக்கு இந்த உண்மை தெரியும். கமல் கூறியது உண்மைதான். வரலாறு தெரிந்தால் அவர்கள் இந்த பேச்சை எதிர்க்க மாட்டார்கள்” எனக் கூறினார்.

Scroll to load tweet…