எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் காலை 10.30 மணிக்கு ஆலோசனை செய்யப்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது எஸ்.பி.பிக்கு அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 5ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்.பி.பி., அனுமதிக்கப்பட்டார். தேவையற்ற வதந்திகளை தவிர்ப்பதற்காக தனது உடல்நலம் குறித்தும், மருத்துவமனையில் சேர்ந்தது குறித்து அவரே வீடியோ வெளியிட்டார்.

தொடக்கத்தில் அவருக்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், கடந்த மாதம் 12ஆம் தேதி, தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். மூச்சுவிட அவர் தடுமாறியதால், 13ஆம் தேதி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கொரோனாவும் சேர்ந்து தாக்கியதால், பெரும் பாதிப்புக்குள்ளாகிய அவர், தீவிர சிகிச்சையின் பலனாக அதிலிருந்து மீண்டார்.

"பாடும் நிலா மீண்டு வா" என்று இந்திய திரையுலகமே 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தியது. திரையுலகினரும், மெல்லிசை கலைஞர்களும், இசை ரசிகர்களும், பாலசுப்ரமணியம் நலம்பெற உருக்கமாக பிரார்த்தித்தனர். கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. 21ஆம் தேதி முதல் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தென்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்கள் உதவியுடன் அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சை அவருக்கு கை கொடுத்தது.

 

மெல்ல மெல்ல அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு பிசியோதெரபி அளிக்க தொடங்கினார்கள் மருத்துவர்கள். 31ஆம் தேதி அவருக்கு சுயநினைவு திரும்பியது. கடந்த 3ஆம் தேதி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. இதனை தொடர்ந்து அவரை 15 நிமிடம் அமர வைத்து, சிகிச்சையை தொடர்ந்தனர் மருத்துவர்கள். கடந்த 8ஆம் தேதி அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும், எக்மோ சிகிச்சை மட்டும் தொடர்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று தீடீரென எஸ்.பி. பி. உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்கள் வெளிவரத் துவங்கின. இதை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவமனை சார்பில் நேற்று மாலை அறிக்கையும் வெளியாகின.

அந்த அறிக்கையில், தீடீரென எஸ்.பி.பி அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதை அறிந்த ரசிகர்களும், திரைத் துறை பிரபலங்கலும் எஸ்.பி.பி அவர்கள் குணமடைய பிரார்தித்து வருகின்றனர். அவ்வகையில் தற்போது நடிகர் சல்மான்கான் ட்விட்டரில் எஸ்.பி.பி. அவர்களது உடல்நிலை விரைவிலேயே குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும், எனக்காக எஸ்.பி.பி அவர்கள் பாடிய ஒவ்வொரு பாடலுக்காகவும் தற்போது எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.