கத்தி, துப்பாக்கி  ஆகிய படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைந்துள்ள படம் சர்கார். ஏற்கெனவே இந்த கூட்டணியில் வெளியான 2 படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்திருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இதுமட்டுமின்றி சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யின் அரசியல் பேச்சு, படக்குழு கொடுத்த விளம்பரங்களும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த உற்சாகத்தை விஜய் ரசிகர்கள் நேற்று கொண்டாட்டங்களாக வெளிப்படுத்தினர். முன்பதிவு மட்டுமின்றி முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்து திரையரங்குகளிலும் வேகமாக விற்றுத் தீர்ந்தன. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்ததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

வெற்றிகரமாக முதல் நாளைக் கடந்திருக்கும் சர்கார் படத்தின் வசூல் ரூ.30 கோடியை கடந்திருக்கிறது. பார்கிங், பாப்கார்ன் மற்றவை உட்பட பல வசூலையும் சேர்த்து  ஒரே நாளில் 50 கோடி ரூபாய் வரை வழல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ்படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 22 திரையரங்குகளில் 330 காட்சிகள் திரையிடப்பட்டது. காலை முதல் இரவு வரையிலான காட்சிக்கு டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பி இருந்தன. முதல் நாள் மட்டும் 2 கோடியே 37 லட்ச ரூபாய் வசூலை எட்டிப் பிடித்து சர்கார் சாதனை படைத்துள்ளது. இது காலா ரூ.1.75 கோடி, பாகுபலி படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் பல்வேறு திரையரங்குகளில் 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாக வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்ட சர்கார் சுமார் ரூ.2.31 கோடி வசூல் செய்திருக்கிறது.