நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான சரத்குமார், சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 11ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். 

அப்போது விழா மேடையில் பேசிய சரத்குமார்,மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது வாயே திறக்காத ரஜினிகாந்தும், கமலஹாசனும் அவர் மறைந்த பிறகு அரசியல் பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது அரசியல் குறித்து பேசும் நடிகர் ரஜினியும், கமலும் இது வரை தமிழக மக்களுக்காக எதுவும் செய்யாதவர்கள் என சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய இவர் திரையுலகினர் யாரையும் நான் பகைத்துக் கொள்ள  விரும்பவில்லை என்றும், ரஜினியும், கமலும் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் தான்.  ஆனால் ரஜினிகாந்த் தற்போது இதுபோல் பேசியுள்ளதால் ஒரு வேளை கடவுள் ரஜினியிடம் பேசிவிட்டாரா என தனக்கு தெரியவில்லை என கிண்டலாக கூறினார்.

பின் பட பிரச்சனை காரணமாக ஊரை விட்டு போவேன் என்று கூறிய கமல் தற்போது ட்விட்டர் மூலம் அரசியல் பேசுவது ஏன்? என்றும் விழா மேடையில் கேள்வி எழுப்பினார். ட்விட்டர் பதிவுகளை பார்த்துவிட்டு மக்கள் திசை திரும்பிவிடக் கூடாது என்றும் தெளிவான முடிவுகளை மக்கள் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.