பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள MGM  மருத்துவமனையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று, மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இதன் பலனாக, எஸ்.பி.பி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் எஸ்.பி.பி உடல் நிலை குறித்து வதந்திகள் வருவதை தடுக்கும் விதத்தில், எஸ்.பி.பி யின் மகன் சரண் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், சிகிச்சை பெற்று வரும் தந்தையின் உடல் நலம் குறித்த உண்மை தகவல்களை வெளியிட்டு வந்தார்.

விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், திடீர் என எஸ்.பி.பி உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. இது ஒட்டு மொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கிட்ட தட்ட 16 மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதை கவர்ந்த, எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என மீண்டும் அவருக்காக ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய பிராத்தனையை துவங்கி உள்ளனர்.

அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான், அனைவருடைய வலிமையான நம்பிக்கை உங்களை விரைவில் குணமடைய வைக்கும். இதயத்தில் ஆழத்தில் இருந்து உங்களுக்காக பிராத்திக்கிறேன். நீங்கள் தனக்கு எழுதிய ஒவ்வொரு இனிமையான பாடல்களுக்கும் நன்றி. ஐ லவ் யு சார் என பதிவிட்டுள்ளார்