மறைந்த முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பல இயக்குனர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.

இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர்  ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில், நடிகை நித்யாமேனன் தேர்வாகியுள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றத்தை ஏற்கனவே வெளியிட்ட பிரியதர்ஷினி இந்த படத்தில் நடிக்கும்  மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார். 

இவரை தொடர்ந்து, இயக்குனர் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் ஏற்கனவே வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் தயாராகியுள்ள என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தில், அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து தேசிய விருதை பெற்றவர். 

ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் அவருடைய தோழி, சசிகலா வேடத்தில் நடிக்கப் போவது யார்? என்கிற பரபரப்பான கேள்வி பலரது மனதிலும் நிலவி வருகிறது.  தற்போது சாய்பல்லவியை சசிகலா வேடத்தில் நடிக்க வைக்க விஜய் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'பிரேமம்' படத்தில் நடித்து பிரபலமான இவர், தமிழில் இயக்குனர் விஜய் இயக்கிய தியா படத்தில் அறிமுகமானார். மேலும்  சமீபத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான மாரி 2 ,  திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதிலிருந்து அரசியலுக்கு வந்தது முதல் அமைச்சரான வரை உள்ள சம்பவங்களை இந்த படத்தில் காட்சிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.