சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பின்னும் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் முதற்கொண்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  சோசியல் மீடியாவில் குவியும் வாழ்த்துக்களால் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு மூச்சுத்திணறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எனவே தான் #HBDSuperstarRajinikanth #HappyBirthdaySuperstar #HBDThalaivarSuperstarRAJINI #HappyBirthdayRajinikanth #HBDRajiniKanth போன்ற  ஹேஷ்டேக்குகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழில் வாழ்த்து கூறி அசத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது ட்வீட்டில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி சார் என்று தமிழிலும், திரையில் உங்களுடைய ஸ்டைலும், நிஜத்தில் உங்களது அடக்கமும் தான் ஒவ்வொரு தர்பாரிலும் உங்களை தலைவா ஆக்குகிறது என ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார். 

இதேபோல, ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போதே தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் ஹர்பஜன் சிங். தமிழர்களின் கொண்டாட்டங்களின் போது மட்டுமல்லாது, பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் விதமாக அவ்வப்போது தமிழில் பதிவுகளைப் போட்டு அசத்தி வருகிறார் ஹர்பஜன். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங். 

அந்தப் பதிவில், ஒருமுறை கூட உங்கள் சிகரம் குறைந்ததேயில்லை. நீங்கள் தூக்கிப்போட்டுப் பிடிக்கும் சிகரெட் விழுந்ததேயில்லை. ஆறில் இருந்து அறுபது வரை, உங்கள் வசீகரத்தில் மயங்கிய நாங்கள் எழுந்ததேயில்லை.
சினிமா பேட்டை இன் லார்டு என்றுமே நீங்கள் தான் தலைவா.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என ரஜினி பதிவிட்டுள்ளார்.