சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படத்தை 'தல' அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவா இயக்குகிறார். தற்போதைக்கு 'தலைவர் 168' என அழைக்கப்படும் இந்தப் படத்தை, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

'எந்திரன்', 'பேட்ட' படங்களின் மெகா ஹிட்டை தொடர்ந்து, ரஜினிகாந்த் -கலாநிதி மாறன் கூட்டணி சேர்ந்திருக்கும் 3-வது படம் இது. 
'தலைவர் 168' படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளராக டி.இமான் கமிட்டாகியுள்ளார். 

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் படத்திற்கு டி.இமான் இசையமைப்பது இதுதான் முதல்முறை. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அண்மையில், தல அஜித் - சிவா கூட்டணியில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் டி.இமானின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'தலைவர் 168' படத்திற்காக சிவா - டி.இமான் காம்போ மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.