ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் சண்டையிடுவதை நிறுத்துமாறு ரஜினியின் சக நடிகர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 ஆண்டுகளை கடந்தும் தமிழ் திரையில் மட்டுமின்றி, இந்திய திரையுலகிலேயே ஒரே சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்றளவும் ரஜினி ரசிகர்கள் அவரின் படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் அதற்கு மிகப்பெரிய உதாரணம். தனது சினிமா கெரியர் முழுவதும் மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் கூட மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாகவே இருந்தார். ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதற்கும் ரஜினியின் மாஸ் தான் காரணம். ஆனால், ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் சண்டையிடுவதை நிறுத்துமாறு ரஜினியின் சக நடிகர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம். அந்த நடிகர் வேறு யாருமில்லை மறைந்த நடிகர் ரகுவரன். ரஜினிகாந்துடன் பல படங்களில் ரகுவரன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ரஜினியும் - ரகுவரனும் சிறந்த நண்பர்களாகவும் இருந்தனர்.இந்த சூழலில் தான் ரஜினிக்கு ஒரு முக்கியமான அறிவுரையை ரகுவரன் சொல்லி உள்ளார். அதாவது, படத்தில் ஒரு சமாதான தூதராக அல்லது அல்லது அமைதியை உருவாக்குபவராக ரஜினி நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்திடம் ரகுவரன் கூறினாராம். 

படம் ஹிட்டானா ஃபாரின் கார்... கோலிவுட்டில் உருவான புது டிரெண்ட் - காஸ்ட்லி காருக்காக காத்திருக்கும் நெல்சன்..!

இந்த சம்பவத்தை ரகுவரனின் சகோதரர் ரமேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ரஜினிகாந்த் தனது படங்களில் அமைதியானவராக நடிக்க ஆரம்பித்தால் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்று அண்ணன் கூறியதாக ரமேஷ் தெரிவித்தார். இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த, ரமேஷ், “அண்ணன் ரஜினியிடம், ‘சார், உங்க படங்களில் சண்டை போடுவதையெல்லாம் விட்டுவிட்டு, வெளியில் நடக்கும் சண்டைகளை எல்லாம் நிறுத்திவிட்டு சமாதானம் செய்பவராகப் நடிக்க வேண்டும். இது உங்களை அடுத்த லெவலுக்கு அழைத்து செல்லும்.’ என்று தெரிவித்தார். ஆனால் ரஜினி தனது வழக்கமான ட்ரேட்மார்க் சிரிப்பையே அதற்கு பதிலாக அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ரமேஷ் தனது சகோதரர் ரகுவரன் ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொண்ட வலுவான பிணைப்பு குறித்தும் விரிவாகக் கூறினார். ரமேஷ் கூறுகையில், "ஒரு சமயம், மதிய உணவு சாப்பிடும் போது, ரஜினி சார், ரகுவரன் உடன் அமர்ந்து பேச விரும்பினார். இருவரும் சாவகாசமாக அரட்டை அடித்து சாப்பிடுவார்கள். உண்மையில், ரஜினி சார் அப்போது திரை வாழ்க்கையில் உச்சியில் இருந்தார். அப்போதி, அவர் அடுத்து என்ன செய்வது என்று ரகுவரனிடம் கேட்பார்." என்று கேட்பார்

ரமேஷின் இந்த கருத்துக்கள் மூலம் ரகுவரன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் திரையில் வெற்றிகரமான காம்போவாக இருந்தது மட்டுமின்றி, கேமராவிற்கு வெளியேயும் இருவரும் ஒரு சிறந்த பிணைப்பைப் பகிர்ந்து கொண்டனர் என்பது தெளிவாகிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் ரகுவரன் 2008ல் தனது 49 வயதில் காலமானார். சிவா, ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா, சிவாஜி உட்பட பல படங்களில் ரஜினியும், ரகுவரனும் இணைந்து நடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி என்ற வில்லன் கேரக்டரில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார் ரகுவரன்.

இன்றுவரை தனக்கு சவால் விட்ட இரண்டு எதிரிகளில் ரகுவரனும் ஒருவர் என்று ரஜினிகாந்த்தே ஒருமுறை தெரிவித்திருந்தார். "எனது கேரியரில், இரண்டு நடிகர்கள் மட்டுமே எனது படங்களில் வில்லனாக எனக்கு சவால் விட்டனர். ஒன்று பாட்ஷாவில் நடித்த ரகுவரன் நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம், மற்றும் படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரம்" என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.