நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புக்காக கர்நாடகா மாநிலத்துக்கு சென்றிருந்தபோது அவரைக்காண ஏராளமான மக்கள் குவிந்தத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth Jailer 2 Movie Shooting in Karnataka : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படம் தயாராகி வருகின்றன. இதில் கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
கூலி, ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களுக்குமே அனிருத் தான் இசையமைக்கிறார். கூலி படத்தின் பின்னணி இசையை அமைக்கும் பணியில் பிசியாக உள்ளார் அனிருத். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. மறுபுறம் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் செம பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்திய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மைசூரு சென்றுள்ளனர்.
மைசூரில் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்
மைசூரு அருகே உள்ள மாண்டியாவில் தான் தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வந்துள்ள தகவல் அறிந்த ரசிகர்கள், அவரைக் காண அப்பகுதியில் அதிகளவில் குவிந்தனர். ஷூட்டிங் முடிந்து செல்லும் போது நடிகர் ரஜினிகாந்த் காரின் சன் ரூஃப் வழியாக அனைவரையும் பார்த்து நன்றி தெரிவித்தது மட்டுமின்றி கையசைத்தபடி சென்றார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் கர்நாடகாவில் ரஜினிக்கு இவ்வளவு ரசிகர்களா என வாயடைத்துப் போய் உள்ளனர்.
ஒரு சிலரோ அங்கு ரஜினியை பார்க்க வந்தவர்கள் வழிநெடுக காரை நிறுத்தி இருந்ததை வீடியோ எடுத்து, படையப்பா பட சீனை நிஜத்தில் பார்ப்பது போல உள்ளது என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில் தான் என்பதால் அவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியும் கன்னட மக்கள் மீது தனக்கு இருக்கும் அன்பை பல மேடைகளில் ஓப்பனாக கூறி இருக்கிறார்.
