சினிமா பிஸ்னஸ் விநோதமானது. ஒரு கோடி செலவில் படமெடுத்து, அதற்கு ரெண்டு கோடி செலவில் விளம்பரம் செய்து, ஆறு கோடிக்கு அதைவிற்பதன் மூலம் மூன்று கோடிக்கு லாபம் பார்ப்பார்கள். இந்த கணக்கெல்லாம் சின்ன படங்களுக்குதான் பொருந்தும். ஆனால் மெகா ஸ்டார்கள் நடிக்கும் படங்களின் கேன்வாஸ் ரொம்ப பெரிதாய் இருக்கும்.  

மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு நூறு கோடியை தாண்டி பட்ஜெட் போட்டு அசரடிக்கிறார்கள் தமிழ் சினிமாவில். டப்பிங் முடித்து படம் ரெடியாகும் வரை நூறு கோடி என்றால், அதற்கு விளம்பர செலவும் பல கோடிகள் தேவைப்படுமே? என்று நீங்கள் யோசிக்கலாம். இன்றைய சூழலில் அப்படி தேவையில்லை என்பது போலாகிவிட்டது. 

ரஜினி, அஜித், விஜய், விஜய்சேதுபதி போன்ற மிக முக்கிய ஹீரோக்களின் ரசிகர்களே தங்கள் செலவிலேயே படத்தின் ப்ரமோஷனை தெறிக்கத் தெறிக்க நடத்திக் கொள்கிறார்கள். இதனால் தயாரிப்பு தரப்புக்கு பல கோடிகள் மிச்சமாகிறது! என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். இதற்கு பக்கா உதாரணமாய் சுட்டிக் காட்டப்படுகிறது ரஜினி மற்றும் அஜித் இருவருக்குள்ளும் இப்போது நடந்து கொண்டிருக்கும் பேய்த்தனமான யுத்தம். பேட்ட படத்தின் வெற்றிக்காக ரஜினி ரசிகர்களும், விஸ்வாசம் படத்தின் வெற்றிக்காக அஜித் ரசிகர்களும் வெறியாய் மோதிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்று இணையத்தில்தான் நடக்கிறது இந்த யுத்தம். 

பொதுவாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள்தான் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசிக் கொண்டு மோதுவார்கள். ஆனால் இந்த முறை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையில் இது நடக்கிறது. அஜித்தை ரஜினி ரசிகர்கள் ‘எங்க தலைவரை விடவும் கிழவனா இருக்கிறார் தல’ என்று வம்பிழுக்க, தல ரசிகர்களோ ‘விக் வெச்ச பிளாக் கிழவனுக்கு சின்ன பசங்க கூட என்ன போட்டி வேண்டியிருக்கு?’ என்று போட்டுப் பொளந்திருக்கிறார்கள். இது வெறும் டீசர்தான், இணையத்தில் நடக்கும் மோதலின் மெயின் பிக்சரைப் பார்த்தீர்களென்றால் ரத்தவாந்தி வந்துவிடும். அந்தளவுக்கு தெறிக்கிறது யுத்தம். 

இவர்களின் சண்டையை  பொதுவான மக்களும், மற்ற நடிகர்களின் ரசிக கூட்டமும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதால் இரண்டு படங்களுக்குமான விளம்பரமும் தானாக நடக்கிறது பைசா செலவில்லாமல். இரண்டு படங்களுக்கான வரவேற்பும், எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகிறது. இதனால் பேட்டயை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தரப்பும், விஸ்வாசத்தை தயாரிக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தரப்பும் செமத்தியான குஷியில் இருக்கின்றனர்.

சில கோடிகளை கொட்டினாலும் கூட கிடைக்காத இந்த விளம்பரம் ச்சும்மா கிடைப்பதால் அவர்களுக்கு ஆனந்தம் வராதா என்ன? நண்பனிடம் கடன் வாங்கி ரீசார்ஜ் செய்து, தன் தலைவனுக்காக ஆன்லைனின் கூவும் முட்டா ரசிகர்கள் இருக்கும் வரை ஹீரோ தலைவர்களின் காட்டில் பண மழைதான் போங்கள்!