என்ன ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, சரத்பாபு சீக்கிரமா போயிட்டாரு - அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்
சென்னை தி-நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அவரது நண்பரும், நடிகருமான ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். செப்சிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபுவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வந்த நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சரத்பாபுவின் மறைவு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் சரத்பாபு.
இதையும் படியுங்கள்... ரஜினியின் எஜமானாக நடித்தாலும்; ரியல் லைஃப்பில் தோழனாக தோல் கொடுத்தவர் சரத்பாபு - இருவரின் நட்பு பற்றி தெரியுமா
சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பனாக இருந்து வந்தார் சரத்பாபு. அவரின் மறைவுச் செய்தி ரஜினிகாந்தை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்று காலை சென்னையில் உள்ள திநகருக்கு கொண்டுவரப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். தனது நண்பர் மறைவை தாங்க முடியவில்லை என அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கமாக பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், சரத்பாபு எப்போது சிரித்த முகத்துடனே இருப்பார். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மெகாஹிட் ஆகின. ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சிகரெட் பிடிப்பதை பார்த்தால் உடனே சிகரெட்டை பிடிங்கி கீழே போட்டு அணைத்துவிடுவார். அந்த அளவுக்கு என்மீது அன்பு வைத்திருந்தார். என்னை ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, இப்போ அவர் சீக்கிரமாவே போனது வருத்தமா இருக்கு” என எமோஷனலாக பேசினார் ரஜினிகாந்த்.
நடிகர்கள் ரஜினியும் சரத்பாபுவும் இணைந்து மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும், சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை, பாபா, கே.எஸ்.ரவிக்குமாரின் முத்து, பாலச்சந்தர் தயாரித்த நெற்றிக்கண், வேலைக்காரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இதில் பெரும்பாலான படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சரத்பாபுவிற்கு இப்படி ஒரு கடைசி ஆசை இருந்ததா? அடடா... கடைசிவரை நிறைவேறாமலே போயிருச்சே!