அ.தி.மு.க.அரசின் அச்சுறுத்தலுக்கு பணியாமல் ‘மன்னிப்பும் கேட்க முடியாது. எதிர்காலத்தில் அரசை விமர்சித்து படம் எடுக்க மாட்டேன் என்பதற்கு உத்தரவாதமும் கொடுக்கமுடியாது’ என்று அறிவித்த ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து ரஜினியை வைத்து இயக்கப்போகும் படம் முழுக்க முழுக்க அரசியல் களம் கொண்டது என்று செய்திகள் பரபரக்கின்றன.

இன்னும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யப்படாத படம் ஒன்றில் ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அற்விப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர்12 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அப்படத்திற்கு ‘நாற்காலி’ என்று பெயர் சூட்டப்பட இருப்பதாகவும், அதில் ரஜினி மக்களுக்கு நல்லது செய்யும் முதல்வராக நடிப்பதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.

வாயைத்திறந்தாலே சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் ரஜினி, தமிழகத்தில் தனது அரசியல் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து பெரும் குழப்பத்துக்கு ஆளாகி இருக்கிறார். அதைச் சரிக்கட்ட ஒரு நேர்மையான அரசியல்வாதியாக நடித்துவிட்டு, அப்புறம் அரசியலில் குதிப்பது நல்லது என்று ரஜினி கருதுவதாகவும், அதனை ஒட்டியே முருகதாஸின் அரசியல் கதையை அவர் செலக்ட் பண்ணியதாகவும் சொல்லப்படுகிறது.