ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி,நயன்தாரா, இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடித்திருக்கும் ‘தர்பார்’படம் பொங்கலுக்கு 5 தினங்கள் முன்பாக, அதாவது ஜனவரி 9ம் தேதி அன்றே ரிலீஸாகவிருப்பதாக அப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். 

இம்முறை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை செவ்வாயன்று விழுவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையிலிருந்து சுமார் ஏழு விடுமுறை தினங்கள் விழுகின்றன. அதை பயன்படுத்தும் விதமாக ஜனவரி 9ம் தேதி தர்பாரை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கும் பட நிறுவனம் அதை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் வெளியிட்டுள்ளது. இன்னொரு பக்கம் உடன் ரிலீஸாகவிருக்கும் ஒன்றிரண்டு படங்கள் 13 அல்லது 14ம் தேதிகளில் ரிலீஸாகும் பட்சத்தில் முன்கூட்டியே ரசிகர்களிடம் இருக்கும் பணத்தை ஒட்டக் கறந்துவிடலாம் என்பதும் இவர்களது இன்னொரு கணக்கு.

இப்படி 5 நாள் முன்னதாக ரிலீஸ் செய்தால் பணத்தை அள்ளிவிடலாம் என்று விநியோகஸ்தர்களுக்கு நப்பாசை காட்டியுள்ள லைகா நிறுவனம் படத்தின் வியாபாரத்தை பேசத்துவங்கியுள்ள நிலையில் தமிழக தியேட்டர் உரிமைகளுக்கு மட்டும் 75 கோடி என்று அறிவித்துள்ளதாம். அதே போல் மொத்த வியாபாரத்தை படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ள டிசம்பர் 7ம் தேதிக்குள் முடித்துவிடத் திட்டமாம்.

இந்த பொங்கலன்று ரஜினி படத்துடன் சூர்யாவின் ‘சூரரை போற்று’அல்லது கார்த்தியின் ‘சுல்தான்’மற்றும் ரஜினியின் மருமகன் தனுஷின் ‘பட்டாஸ்’ ஆகிய படங்கள் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.